Thursday, December 13, 2012

பராசக்தி,வாணி,ஸ்ரீ தேவி,பார்வதி


பராசக்தி

(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையம்எலாம் நீ நிறைந்தாய் !
ஆதாரம் உன்னை அல்லாமல் ஆரெமக்குப் பாரினிலே !
ஏதா யினும்வழிநீ சொல்வாய் எமது உயிரே !
வேதாவின் தாயே ! மிகப் பணிந்து வாழ்வோமே

வாணி

வாணி கலைத் தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள்
ஆணி முத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

ஸ்ரீ தேவி

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி அழகுடையாள்,
அன்னையவள் வையம்எலாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொன்தாளே சரண்புகுந்து வாழ்வோமே

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே ஊதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்


இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
இனிமனக் கவலைக் கிடமில்லை

மந்திரங்களைச் சோதனை செய்தால்
வையகத்தினை ஆள்வது தெய்வம்
இந்தத் தெய்வம் கதிஎன்றிருப்பீர்
ஆக்கம் உண்டென் றனைத்தும் உரைக்கும்

மரத்தின் வேரில் அதற்குணவுண்டு
வயிற்றினிலே கருவுக் குணவுண்டு
தரத்தில் ஒத்த தருமங் களுண்டு
சக்தி என்றிலோ முக்தியுண்டு

உலகமே உடலாய் அதற்குள்ளே
உயிரதாகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வானொளி போல் அறிவாகி
எங்கணும் பரந்திடும் தெய்வம்

செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்கள் ஆவர்

நோயில்லை வறுமையில்லை
நோன்புஇழைப் பதிலே துன்பமில்லை
தாயும் தந்தையும் தோழனுமாகித்
தகுதியும் பயனும் தரும் தெய்வம்

அச்சமில்லை மயங்குவதில்லை
அன்பும் இன்பமும் மேம்மையும் உண்டு
மிச்சமில்லை பழந்துயர் குப்பை
வெற்றியுண்டு விரைவினில் உண்டு

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்
இனி மனக்கவலைக் கிடமில்லை

Sunday, December 2, 2012

சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம்;-பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே!

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே!

பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர்சுடராம்;-பெண்ணே!

நான் இரட்டைக் குறள் செந்துறை

நான்
இரட்டைக் குறள் செந்துறை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

பரசிவ வெள்ளம்

 பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே

எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.

தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.

எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!

எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி

அறிவே தெய்வம்
கண்ணிகள்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

Thursday, November 29, 2012

ஆத்ம ஜயம்

ஆத்ம ஜயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றா லவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?