Saturday, September 29, 2012

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே-Vetri ettuth thikkumetta kottu murase


முரசு 

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! 
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! 
நெற்றி யொற்றைக் கண்ணானோடே நிர்த்தனம் செய்தாள் 
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே! 

ஊருக்கு நல்லது சொல்வேன் - என்க் 
குண்மை தெரிந்தது சொல்வேன் 
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு 
தெய்வம் துணைசெய்ய வேண்டும் 

வேத மறிந்தவன் பார்ப்பான், பல 
வித்தை தெரிந்தவன் பார்ப்பான் 
நீதி நிலைத்தவ றாமல் - தண்ட 
நெமங்கள் செய்பவன் நாய்க்கன் 

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறை 
பட்டினி தீர்ப்பவன் செட்டி 
தொண்டரென் றோர்வகுப் பில்லை - தொழில் 
சோம்பலைப் போல்இழி வில்லை 

நாலு வகுப்புமிங் கொன்றே - இந்த 
நான்கினில் ஒன்று குறைந்தால் 
வேலை தவறிச் சிதைந்தே - செத்து 
வீழ்ந்திடும் மானிடச் சாதி 

ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள் 
ஓங்க வளர்ப்பவன் தந்தை 
மற்றை கருமங்கள் செய்தே - மனை 
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை 

ஏவல்கள் செய்பவள் மக்கள்! - இவர் 
யாவரும் ஓர்குலம் அன்றோ? 
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல 
வீடு நடத்துதல் கண்டோம் 

சாதிப் பிரிவுகள் சொல்லி - அன்பு 
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் 
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு 
நித்தமும் சண்டைகள் செய்வார் 

சாதிப் கொடுமைகள் வேண்டாம் - அன்பு 
தன்னில் செழித்திடும் வையம் 
ஆதர வுற்றிங்கு வாழ்வோம் - தொழில் 
ஆயிரம் மாண்புறச் செய்வோம் 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 
பேணி வளர்த்திடும் ஈசன் 
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல 
மாத ரறிவைக் கெடுத்தார் 

கண்கள் இரண்டில் ஒன்றைக் - குத்திக் 
காட்சி கெடுத்திட லாமோ? 
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் 
பேதைமை யற்றிடுங் காணீர் 

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்-vanir parakkinra pulelaanaan


நான் 

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான் 
மண்ணிற் றிரியும் விலங்கெலாநான் 
கானிழல் வளரு மரமெலாநான் 
காற்றும் புனலுங் கடலுமேநான். 

விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான் 
வெட்ட வெளியின் விரிவெலாநான் 
மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான் 
வாரியி லுள்ள வுயிரெலாநான். 

கம்ப னிசைத்த கவியெலாநான் 
காருகர் தீட்டு முருவெலாநான் 
இம்பர் வியக்கின்ற மாட கூடம் 
எழினகர் கோபுரம் யாவுமேநான். 

இன்னிசைமாத ரிசையுளேனான் 
இன்பத் திரள்க ளனைத்துமேநான் 
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாநான் 
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாநான். 

மந்திரங் கோடி யியக்குவோனான் 
இயங்கு பொருளி னியல்பெலாநான் 
தந்திரங் கோடி சமைத்துளோனான் 
சாத்திர வேதங்கள் சாற்றினோனான். 

அண்டங்கள் யாவையு மாக்கினோனான் 
அவைபிழை யாமே சுழற்றுவோனான் 
கண்டநற் சக்திக் கணமெலாநான் 
காரண மாகிக் கதித்துளோனான். 

போற்றி யகவல்-போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!-Potri yakaval


போற்றி யகவல் 

போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்! 
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்! 
கனியிலே சுவையும் காற்றிலே யியக்கமும் 
கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய். 
உலகெலாந் தானா யொளிர்வாய், போற்றி! 
அன்னை, போற்றி! அமுதமே, போற்றி! 
புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய், 
உயிரிலே யுயிராய்,றப்பிலு முயிராய், 
உண்டெனும் பொருளி லுண்மையாய், என்னுளே 
நானெனும் பொருளாய், நானையே பெருக்கித் 
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய், 
கவலைநோய் தீர்க்கு மருந்தின் கடலாய், 
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய், 
யானென தின்றி யிருக்குநல் யோகியர் 
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய், 
செய்கையாய், ஊக்கமாய், சித்தமாய், அறிவாய் 
நின்றிடுந் தாயே, நித்தமும் போற்றி! 
இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி! 
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி! 
அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி! 
சக்தி, போற்றி! தாயே, போற்றி! 
முக்தி, போற்றி! மோனமே, போற்றி! 
சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி! 



சிவ சக்தி புகழ்-ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-Om Sakthisakthi sakthyenru sollu




சிவ சக்தி புகழ் 

ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு - கெட்ட 
சஞ்சலங்கள் யாவினையுங் கொல்லு 
சக்திசக்தி சக்தியென்று சொல்லி - அவள் 
சந்நிதியி லேதொழுது நில்லு. 

சக்திமிசை பாடல்பல பாடு - ஓம் 
சக்திசக்தி யென்றுதாளம் போடு 
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே - சிவ 
சக்திவெறி கொண்டுகளித் தாடு. 

சக்திதனை யேசரணங் கொள்ளு - என்றும் 
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு 
சக்திபுக ழாமமுதை யள்ளு - மதி 
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு. 

சக்திசெய்யும் புதுமைகள் பேசு - நல்ல 
சக்தியற்ற பேடிகளை யேசு 
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி - அவள் 
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு. 

சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை - தைச் 
சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை 
சக்தியெனு மின்பமுள்ள பொய்கை - அதில் 
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை. 

ஓம், சக்திசக்தி சக்தியென்று நாட்டு - சிவ 
சக்தியருள் பூமிதனில் காட்டு 
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் - புவிச் 
சாதிகளெல் லாமதனைக் கேட்டு. 

சக்திசக்தி சக்தியென்று முழங்கு- அவள் 
தந்திரமெல் லாமுலகில் வழங்கு 
சக்தியருள் கூடிவிடு மாயின் - உயிர் 
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு. 

சக்திசெயுந் தொழில்களை யெண்ணு - நித்தஞ் 
சக்தியுள்ள தொழில்பல பண்ணு 
சக்திதனை யேயிழந்து விட்டால் - ங்கு 
சாவினையும் நோவினையும் உண்ணு. 

சக்தியரு ளாலுலகி லேறு - ஒரு 
சங்கடம்வந் தாலிரண்டு கூறு 
சக்திசில சோதனைகள் செய்தால் - அவள் 
தண்ணருளென் றேமனது தேறு. 

சக்திதுணை யென்றுநம்பி வாழ்த்து - சிவ 
சக்திதனை யேயகத்தி லாழ்த்து 
சக்தியுஞ் சிறப்புமிகப் பெறுவாய் - சிவ 
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து. 

உடன்பிறந் தார்களைப் போலே-Udanpirantharkalaipola


உடன்பிறந் தார்களைப் போலே - இவ் 
வுலகில் மனிதரெல் லாரும் 
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில் 
ஏதுக்கு சண்டைகள் செய்வீர்? 

மரத்தினை நட்டவன் தண்ணீர் - நஙு 
வார்த்ததை ஓங்கிடச் செய்வான் 
சிரத்தை யுடையது தெய்வம் - இங்கு 
சேர்த்த உணவெல்லை யில்லை 

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு 
வாழும் மனிதரெல் லோருக்கும் 
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறை 
பங்கைத் திருடுதல் வேண்டாம் 

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ் 
வுலகினில் மனிதரெல் லாரும் 
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத் 
தின்று பிழைத்திட லாமோ? 

வலிமை யுடையது தெய்வம் - நம்மை 
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் 
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை 
வீழ்த்தி மிதத்திட லாமோ? 

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன் 
தனடிமை கொள்ள லாமோ? 
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள் 
சிற்றடி மைப்பட லாமோ? 

அன்பென்று கொட்டு முரசே! - அதில் 
யார்க்கும் விடுதலை உண்டு 
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி 
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார் 

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் 
அத்தன பேருக்கும் ஒன்றாய் 
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு 
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் 

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் 
பற்றுஞ் சகோதரத் தன்மை 
யாருக்கும் தீமைசெய் யாது - புவி 
யெங்கும் விடுதலை செய்யும் 

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு 
வாழும் மனிதருக் கெல்லாம் 
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் 
பாரை உயர்த்திட வேண்டும் 

ஒன்றென்று கொட்டு முரசே! - அன்பில் 
ஓங்கென்று கொட்டு முரசே ! 
நன்றென்று கொட்டு முரசே! இந்த 
நானில் மாந்தருக் கெல்லாம் 


வேள்விப் பாட்டு- இயற்கையென் றுனையுரைப்பார்-Velvi pattu




வேள்விப் பாட்டு 

இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர் 
இணங்குமைம் பூதங்க ளென்றிசைப்பார் 
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த் 
தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர் 
வியப்புறு தாய்நினக்கே - இங்கு 
வேள்விசெய் திடுமெங்கள் 'ஓம்' என்னும் 
நயப்படு மதுவுண்டே - சிவ 
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய். 

அன்புறு சோதியென்பார் - சிலர் 
ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார் 
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர் 
எண்ணருந் துன்பமென் றுனையிசைப்பார் 
புன்பலி கொண்டுவந்தோம் - அருள் 
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் 
மின்படு சிவசக்தி - எங்கள் 
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 

உண்மையி லமுதாவாய் - புண்கள் 
ஒழித்திடு வாய்களி யுதவிடுவாய் 
வன்மைகொ ளுயிர்ச்சுடராய் - இங்கு 
வளர்ந்திடு வாயென்று மாய்வதிலாய் 
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும் 
ஊறிடுந் திருவருட் சுனையாவாய் 
அண்மையி லென்றுநின்றே - எம்மை 
ஆதரித் தருள்செயும் விரதமுற்றாய். 

தெளிவுறு மறிவினைநாம் - கொண்டு 
சேர்த்தனம், நினக்கது ஸோமரஸம் 
ஒளியுறு முயிர்ச்செடியில் - இதை 
ஓங்கிடு மதிவலி தனிற் பிழிந்தோம் 
களியுறக் குடித்திடுவாய் - நின்றன் 
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம் 
குளிர்ச்சுவைப் பாட்டிசைத்தே - சுரர் 
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம். 

அச்சமுந் துயருமென்றே - இரண் 
டசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார். 
துச்சமிங் கிவர்படைகள் - பல 
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் 
இச்சையுற் றிவரடைந்தார் - எங்கள் 
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே 
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு 
பெருநக ருடலெனும் பெயரினதாம். 

கோடிமண் டபந்திகழும் - திறற் 
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும் 
நாடிநின் றிடர்புரிவார் - உயிர் 
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார் 
சாடுபல் குண்டுகளால் - ஒளி 
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார் 
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள் 
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய். 

நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள் 
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே 
பொன்னவிர் கோயில்களும் - எங்கள் 
பொற்புடை மாதரு மதலையரும் 
அன்னநல் லணிவயல்கள் - எங்கள் 
ஆடு மாடுகள் குதிரைகளும் 
இன்னவை காத்திடவே - அன்னை 
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம். 

எம்முயி ராசைகளும் - எங்கள் 
இசைகளுஞ் செயல்களுந் துணிவுகளும் 
செம்மையுற் றிடவருள்வாய் - நின்றன் 
சேவடி யடைக்கலம் புகுந்துவிட்டோம். 
மும்மையின் உடைமைகளும் - திரு 
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம் 
அம்மைநற் சிவசக்தி - எமை 
அமரர்தந் நிலையினி லாக்கிடுவாய். 

Saturday, September 1, 2012

முருகக் கடவுள் மீது கிளித் தூது-முருகக்கடவுள் கிளி தூது


முருகக் கடவுள் மீது கிளித் தூது-முருகக்கடவுள் கிளி தூது  

சொல்ல வல்லாயோ? - கிளியே 
சொல்லநீ வல்லாயோ? 

வல்லவேல் முருகன் - தனையிங்கு 
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல) 

தில்லை யம்பலத்தே - நடனம் 
செய்யும் அமரர்பிரான் - அவன் 
செல்வத் திருமகனை - இங்கு வந்து 
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல) 

அல்லிக் குளத்தருகே - ஒரு நாள் 
அந்திப் பொழுதினிலே - அங்கொர் 
முல்லைச் செடியதன்பாற் - செய்த வினை 
முற்று மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல) 

பாலை வனத்திடையே - தனைக்கைப் 
பற்றி நடக்கையிலே - தன் கை 
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன 
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று (சொல்ல

மாலைப்பொழிதிலொருகுயிலும் குரங்கும் -Malapozhithiloru

மாலைப்பொழிதிலொரு-Malapozhithiloru  


குயிலும் குரங்கும் 

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை. 
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே,- 
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! 
நெஞ்சகமே! தொல்விதியி னீதியே! பாழுலகே!- 
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை யென்னுரைப்பேன்! 
பெண்ணா லறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ! 
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ! 
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே 
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 
விம்மிப் பரிந்துசொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய், 
அம்மவோ! மற்றாங்கோ ராண்குரங்கு தன்னுடனே 
ஏதேதோ கூறி யிரங்கு நிலைகண்டேன். 
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது? 
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் 
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன். 
கொன்றுவிடு முன்னே, குயிலுரைக்கும் வார்த்தைகளை 
நின்றுசற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும். 
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே 
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 
பேடைக் குயிலிதனைப் பேசியது:- "வானரரே, 
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே, பெண்மைதான் 
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே, நின்னழகைத் 
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? 
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே 
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால், ஊர் வகுத்தல், 
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்றசில 
வாயிலிலே, அந்த மனித ருயர்வெனலாம். 
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும், 
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 
வானரர்தஞ சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ? 
ஆன வரையு மவர்முயன்று பார்த்தாலும், 
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை 
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும், 
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் 
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும், 
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே 
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் 
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும், 
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 
வானரர் போலாவரோ? வாலுக்குப் போவதெங்கே? 
ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ? 

குயிலும் குரங்கும்- Kuyilum Kurankum


குயிலும் குரங்கும்- Kuyilum Kurankum

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை. 
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே,- 
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! 
நெஞ்சகமே! தொல்விதியி னீதியே! பாழுலகே!- 
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை யென்னுரைப்பேன்! 
பெண்ணா லறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ! 
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ! 
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே 
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 
விம்மிப் பரிந்துசொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய், 
அம்மவோ! மற்றாங்கோ ராண்குரங்கு தன்னுடனே 
ஏதேதோ கூறி யிரங்கு நிலைகண்டேன். 
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது? 
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் 
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன். 
கொன்றுவிடு முன்னே, குயிலுரைக்கும் வார்த்தைகளை 
நின்றுசற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும். 
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே 
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 
பேடைக் குயிலிதனைப் பேசியது:- "வானரரே, 
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே, பெண்மைதான் 
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே, நின்னழகைத் 
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? 
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே 
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால், ஊர் வகுத்தல், 
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்றசில 
வாயிலிலே, அந்த மனித ருயர்வெனலாம். 
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும், 
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 
வானரர்தஞ சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ? 
ஆன வரையு மவர்முயன்று பார்த்தாலும், 
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை 
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும், 
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் 
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும், 
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே 
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் 
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும், 
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 
வானரர் போலாவரோ? வாலுக்குப் போவதெங்கே? 
ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ? 

காதலோ காதல்-Kadalo kaadal


காதலோ காதல்-Kadalo kaadal  

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன், 
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்டவன்போல் 
கண்ணு முகமுங் களியேறிக் காமனார் 
அம்பு நுனிக ளகத்தே யமிழ்ந்திருக்க, 
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 
ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற, 
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி, 
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் 
தாளம் படுமோ? தறிபடுமோ? யார்படுவார்? 
நாளொன்று போயினது. நானு மெனதுயிரும், 
நீளச் சிலைகொண்டு நின்றதொரு மன்மதனும், 
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும், 
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா 
மிஞ்சிநின்றோம் ஆங்கு, மறுநாள் விடிந்தவுடன், 
(வஞ்சனைநான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், 
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல், 
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென, 
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே 
நீலிதனைக் காணவந்தேன். நீண்ட வழியினிலே 
நின்றபொருள் கண்ட நினைவில்லை, சோலையிடைச் 
சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற்றொண்கதிரால் 
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின் 
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம் 
வேறெங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல் 
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன் 
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலா நோக்கிவந்தேன் 

தெய்வம் பலப்பல-Deivam palapala


தெய்வம் பலபல
Deivam palapala

தெய்வம் பலபல சொல்லிப் - பகைத் 
தீயை வளர்ப்பவர் மூடர் 
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும் 
ஓர்பொருளானது தெய்வம் 

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம் 
திக்கை வணங்கும் துருக்கர் 
கோவிற் சிலுவையின் முன்னே - நின்று 
கும்பிடும் யேசு மதத்தார் 

யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் 
யாவினும் நின்றிடும் தெய்வம் 
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் 
பற்பல சண்டைகள் வேண்டாம் 

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் 
வீட்டில் வளருது கண்டீர் 
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை 
பேருக் கொருநிற மாகும் 

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் 
சாந்து நிறமொரு குட்டி 
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் 
பாலின் நிறமொரு குட்டி 

எந்த நிறமிருந்தாலும் - அவை 
யாவும் ஒரேதர மன்றோ? 
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது 
ஏற்ற மென்றும் சொல்லலாமோ? 

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில் 
மானுடர் வேற்றுமை யில்லை 
ஏண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு 
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர் 

நிகரென்று கொட்டு முரசே! - இந்த 
நீணிலம் வாழ்பவ ரெல்லாம் 
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச் 
சாதி வகுப்பினை யெல்லாம் 

அன்பென்று கொட்டு முரசே! - அதில் 
ஆக்கமுண் டாமென்று கொட்டு 
துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ் 
சூதுப் பிரிவுகள் போனால் 

அன்பென்று கொட்டு முரசே! - மக்கள் 
அத்தனப் பேரும் நிகராம் 
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு 
யாவரும் ஒன்றென்று கொண்டால்

அம்மா கதை சொல்வாள்-Amma kathai solval


அம்மா கதை சொல்வாள்-Amma kathai solval

உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை 
உயிரெனும் முலையினில் உணர்வெனும்பால்; 
வண்ணமுற வைத்தெனக்கே - என்றன் 
வாயினிற் கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், 
கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக் 
கட்டிநிறை வான்எனுந்தன் கையிலணைத்து 
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல 
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப்பாள். 

இன்பமெனச் சிலகதைகள் - எனக் 
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள் 
துன்பமெனச் சிலகதைகள் - கெட்ட 
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றுஞ் சிலகதைகள் 
என்பருவம் என்றன்விருப்பம் - எனும் 
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே 
அன்பொடவள் சொல்லிவருவாள்;- அதில் 
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். 

விந்தைவிந்தை யாகவெனக்கே - பல 
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள்; 
சந்திரனென் றொருபொம்மை - அதில் 
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்; 
மந்தை மந்தை யாமேகம் - பல 
வன்னமுறும் பொம்மையது மழைபொழியும்; 
முந்தஒரு சூரியனுண்டு - அதன் 
முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே. 

வானத்து மீன்க ளுண்டு - சிறு 
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; 
நானத்தைக் கணக்கிடவே - மன 
நாடிமிக முயல்கினுங் கூடுவதில்லை; 
கானத்து மலைகளுண்டு - எந்தக் 
காலமுமொ ரிடம் விட்டு நகர்வதில்லை, 
மோனத்திலே யிருக்கும் - ஒரு 
மொழியுரை யாதுவிளை யாடவருங்காண். 

நல்லநல்ல நதிகளுண்டு - அவை 
நாடெங்கு மோடிவிளை யாடிவருங்காண்; 
மெல்லமெல்லப் போயவைதாம் - விழும் 
விரிகடற் பொம்மையது மிகப்பெரிதாம்; 
எல்லையதிற் காணுவதில்லை;- அலை 
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; 
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை 
ஒமெனும் பெயரென்றும் ஒலித்திடுங்காண். 
சோலைகள் காவினங்கள் - அங்கு 
சூழ்தரும் பலநிற மணிமலர்கள் 
சாலவு மினியனவாய் - அங்கு 
தருக்களில் தூங்கிடும் கனிவகைகள் 
ஞாலமுற் றிலுநிறைந்தே - மிக 
நயந்தரு பொம்மைக ளெனக் கெனவே 
கோலமுஞ் சுவையுமுற - அவள் 
கோடிபல் கோடிகள் குவித்துவைத்தாள். 

தின்றிடப் பண்டங்களும் - செவி 
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுகளும் 
ஒன்றுறப் பழகுதற்கே - அறி 
வுடையமெய்த் தோழரு மவள்கொடுத்தாள்; 
கொன்றிடு மெனனிதாய் - இன்பக் 
கொடுநெருப் பாய், அனற் சுவையமுதாய், 
நன்றியல் காதலுக்கே - இந்த 
நாரியர் தமையெனைச் சூழவைத்தாள். 

இறகுடைப் பறவைகளும் - நிலந் 
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் 
அறைகடல் நிறைந்திடவே - எண்ணில் 
அமைத்திடற் கரியபல் வகைப்படவே 
சுறவுகள் மீன்வகைகள் - எனத் 
தோழர்கள் பலருமிங் கெனக்களித்தாள்; 
நிறைவுற ன்பம்வைத்தாள்;- அதை 
நினைக்கவு முழுதிலுங் கூடுதில்லை, 

சாத்திரங் கோடிவைத்தாள்;- அவை 
தம்மினு முயர்ந்ததொர் ஞானம்வைத்தாள்; 
மீத்திடும் பொழுதினிலே - நான் 
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே. 
கோத்தபொய் வேதங்களும் - மதக் 
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் 
மூத்தவர் பொய்ந்நடையும் - இள 
மூடர்தம் கவலையு மவள்புனைந்தாள்; 

வேண்டிய கொடுத்திடுவாள்;- அவை 
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்; 
ஆண்டருள் புரிந்திடுவாள்;- அண்ணன் 
அருச்சுனன் போலெனை யாக்கிடுவாள்; 
யாண்டுமெக் காலத்திலும் - அவள் 
இன்னருள் பாடுநற் றொழில்புரிவேன்; 
நீண்டதோர் புகழ்வாழ்வும் - பிற 
நிகரறு பெருமையு மவள்கொடுப்பாள்.